ஜூலை 18
1988 ஆம் ஆண்டு. லைன்ஸ்டாப் சங்கத்தின் மாநில மாநாடு கடலூரில் நடைபெற்றது. அந்த மாநாடு குறித்து திட்டமிட்டார் மாநிலச் செயலர் தோழர் ஜெகன். ஒரு வித்தியாசமான நிகழ்வுக்கான திட்டத்தினை அவர் கூறினார். அனைவரும் உடனடியாக ஏற்றனர்.
கடலூரில் மாநாடு சிறப்பாக துவங்கியது. மாநாட்டின் பின் திரை நிறவெறி ஆட்சிக்கு எதிராக போராடி தனது இளமைக் காலம் முழுவதையும் தனிமைச் சிறையில் கழித்த தென் ஆப்பிரிக்க நாட்டின் காந்தி நெல்சன் மண்டேலாவின் உருவம் நிறைத்தது. மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் அவரின் உருவம் பொறித்த அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாநாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஜூலை 18 அன்று நடைபெற்றது.
நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு, தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் வாதாடுவது, நாடக வடிவில் நடித்துக் காட்டப்பட்டது. நடித்தவன் ஒரு சிறுவன். அந்த நாடகத்தை வடிவமைத்து இயக்கியவர் திருச்சி தோழர் பால்சாமி மற்றும் அவர் குழுவினர். அந்நிகழ்வினை பார்த்தவர்கள் நெகிழ்ந்து நெக்குறுகிப் போனார்கள். மாநாட்டில் நிறவெறி அரசுக்கு எதிராக போராடி சிறையில் இருக்கும் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்யுமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலைக்காகப் போராடும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டப்பட்டு அனுப்பப்பட்டது. 1990 இல் நெல்சன் மண்டேலா 27 ஆண்டு சிறைவாசத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டார். நாடு நிறவெறி ஆட்சியிலிருந்து மீண்டது. அந்நாட்டின் முதல் குடியரசு தலைவராக நெல்சன் மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் தனது என்ற சிந்தனையிலிருந்து விடுபட்டு சக மனிதனின் விடுதலைக்காக போராடுவது குறித்த உணர்வை தொழிலாளிக்கு ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்தது அந்நிகழ்வு.
தோழர் ஜெகனின் சீரிய சிந்தனையால் அன்று நாம் மட்டும் நமது சங்க மாநாட்டில் அவரது பிறந்த நாளை கொண்டாடினோம். இன்று ஜூலை 18. உலகம் முழுவதும் அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
அன்று நிறவெறி ஆட்சிக்கு எதிராக போராடினார். இன்று தன்னை தாக்கும் நோய்க்கு எதிராக போராடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
போராளிகளுக்கு ஓர் முன்னுதாரணம் நெல்சன் மண்டேலா. அவரது பிறந்த நாளில் மனம் நிறந்து வாழ்த்துவோம்! வாழிய பல்லாண்டு!!